கோலாலம்பூர் – அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள், மின்-பதிவுகளாக மாற்றப்பட்டு, ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் – அதன் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி, காலை 9.00 மணி முதல் 11.30 மணிவரை தலைநகர் துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.
‘முரசு’ தமிழ் மென்பொருள் உருவாக்குநரும், செல்லினம், செல்லியல் செயலிகளின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், முயற்சியில் சீனி நைனா முகம்மது (படம்) அவர்களின் எழுத்துப் படிவங்களை மின் பதிவுகளாக மாற்றும் முயற்சி தொடங்கப்பட்டது.
இதற்கான முதல் நன்கொடையாக முத்து நெடுமாறன் 10,000 ரிங்கிட் வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்ததோடு, இதற்குரிய தொழில்நுட்ப செயலாக்கத்தையும் முன் நின்று வழங்கியுள்ளார்.
மலேசிய மின்னூடகமான செல்லியல்.காம் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் உத்தமம் மலேசியக் கிளையின் தலைவர் சி.ம.இளந்தமிழ் இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு புகழுடம்பெய்திய இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் ‘உங்கள் குரல்’ இதழ்கள் அனைத்தையும் மின்-பதிவுகளாக உருவாக்கும் திட்டம், ஓராண்டு கால முயற்சிக்குப்பின் முழுமை பெற்றுள்ளது.
‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் வெளியீடு காணவுள்ள இந்த மின்பதிவுகளை – மலேசிய மின்னூடகமான ‘செல்லியல்’ நிறுவனமும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியக் கிளையும் இணைந்து – இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வெளியிடுகின்றனர்.
‘உத்தமம்’ மலேசியக் கிளையின் தலைவர் சி.ம.இளந்தமிழ் (படம்) இத்திட்டத்திற்கான இணைத் தலைமை ஏற்றதோடு, ‘உத்தமம்’ சார்பிலான அனைத்து நிலை ஆதரவையும் வழங்கி வருகின்றார்.
இந்த மின்பதிவுத் திட்டத்திற்கான தொழில்நுட்பச் செயலாக்கங்களை, ‘முரசு அஞ்சல்’ செயலியை வெளியிட்ட முரசு நிறுவனமும், ‘ஓம்தமிழ் தொலைக்காட்சி’ நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன.
முத்து நெடுமாறன்
சீனி ஐயாவின் மறைவுக்குப் பின்னர், உடனடியாகக் கருத்து வடிவம் கண்ட இந்தத் திட்டத்தை, ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கிய திட்டக் குழுவினர், அவர் வெளியிட்ட 111 ‘உங்கள் குரல்’ இதழ்கள் அனைத்தையும் மின் வடிவாக மாற்றி வெளியிடுகின்றனர்.
இந்த வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 8ஆம் நாள் கோலாலம்பூர் துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில் காலை 9.00 மணிக்குச் சிற்றுண்டியோடு தொடங்கி 11.30 மணி வரை நடைபெறும். விழாவில் மின்பதிவுகள் தொடர்பான விளக்கங்களும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளும் வழங்கப்பெறும்.