கொழும்பு, ஆகஸ்ட் 7- இலங்கை அரசு அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுடன் சமரசத்தை மேற்கொள்ளும் வகையில், அதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த நிதியுதவி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அடாவடித்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அங்கு வாழும் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன. தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் மீது அத்துமீறலான போர் முறைகள் கையாளப்பட்டு அவர்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
அப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டதோடு, மற்றவர்கள் வீடு முதலான உடைமைகளை இழந்து அனாதரவானார்கள்.
அதன்பின்பு வந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படு தோல்வியடைந்து, சிறிசேனா அதிபரானார். அவரது ஆட்சிக் காலத்திலாவது தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், நாட்டில் சமரசம் ஏற்பட்டு அமைதி நிலவும் எனத் தமிழர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அவர்களது எதிர்பார்ப்பு பலிக்கும்படி ஐ.நா.இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்திருப்பதாவது:
“இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போருக்குப் பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுவது தொடர்பான தனது செயல் திட்டத்தை ஐ.நா.சபை கடந்த ஜூன் மாதம் இலங்கை அரசிடம் அளித்தது.
அதன்படி,போரின் காரணமாக உள்நாட்டிலேயே தங்களது ஊரை விட்டு இன்னோர் ஊருக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை, மீண்டும் அந்தப் பகுதிகளில் மறுகுடியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக ஐ.நா. ஏற்கெனவே ரூ.6.37 கோடி நிதி அளித்துள்ளது.
தற்போது இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைத் தமிழர்களுடனான அதன் சமரசத் தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்தும் வகையில், பெரிய அளவில் தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவி அளிப்பது குறித்து, ஐ.நா.வின் முக்கிய உறுப்பு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழர்களுடனான அந்த நாட்டு அரசின் சமரசத் தீர்வு முயற்சிகள் ஈடேறத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா.செய்யும்” என்று ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்துள்ளார்.