சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறித் தின விழாவில் பிரதமர் மோடி தனது உரையைத் தமிழில் தொடங்கினார்.
“தமிழ்நாட்டுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று அவர் தமிழில் தொடங்கியதும், அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் பலமாகக் கைதட்டி அவரது பேச்சை வரவேற்றனர்.
அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து “இங்கு உங்கள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி” என்றதும் கூட்டத்தார் உற்சாகக் குரல் எழுப்பினார்கள்.
அதன்பின்பு, இந்தியில் தனது உரையைத் தொடர்ந்தார் மோடி.
“தேசிய நிகழ்ச்சிகள் எல்லாம் வழக்கமாக டில்லியில் தான் நடக்கும்.எனினும், டில்லியில் நடக்க வேண்டிய நிகழ்ச்சியைச் சென்னையில் வைத்துள்ளதால், டில்லியையே நான் சென்னைக்குக் கொண்டு வந்துவிட்டேன்” என்று தன் உரையில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அவரது உரையில் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றன.
ஆகஸ்ட் 7-ஆம் தேதியைத் தேசிய கைத்தறி தினமாக அறிவித்தார்.
தேசிய நெசவாளர்களை ஊக்கப்படுத்த தனி முத்திரை உருவாக்கப்படும் என்றும், முத்ரா வங்கி மூலம் நெசவாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதோடு, நெசவாளர்களுக்குத் தொழில் துவங்கத் தேவையான நிதியுதவி அனைத்தும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் சொன்னார்.
கைத்தறிக் குழுமத்திற்கான நிதி உதவி இதுவரை ரூ.60 லட்சமாக இருந்ததை ரூ.2 கோடியாக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், திரைப்படத் துறையினர் கைத்தறி நெசவுத் துணிகளை விளம்பரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.