கோலாலம்பூர், மார்ச் 10 – கடந்த சில வாரங்களாக சபாவில் ஊடுருவியுள்ள சூலு சுல்தானின் இராணுவத்தினர் பலியாகிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதும், சபாவை கைப்பற்றும் வரை ஓயமாட்டோம் – இந்தப் போர் தொடரும், என்று சூலு சுல்தானின் குடும்பத்தினர் உறுதியாகவும், ஆவேசத்துடனும் கூறியுள்ளனர்.
சபாவை விட்டு ராணுவம் வெளியேறாது- சூலு சுல்தானின் புதல்வி ஜேசல் அறிவிப்பு
மலேசியப் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வந்தாலும், தனது தந்தையும், (சூலு சுல்தான்) அவரது ராணுவத்தினரும் ஒரு போதும் சபாவை கைப்பற்றும் வரை அவ்விடத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் என்றும், தங்களது சொந்த வீடான சபாவை மீட்பதே தங்களுக்குக் கிடைக்கப்போகும் மரியாதை என்றும் சுல்தானின் புதல்வி ஜேசல் கிராம் பிலிப்பைன்ஸிலுள்ள பிரதான வானொலியான டிஸ்.எம். எம் மிடம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தீவிர விசாரணை
இதற்கிடையில் சபா நெருக்கடிக்குக் காரணம் யார், இதன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் பற்றி கண்டறிய பிலிப்பைன்ஸ் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது,
இந்த புலனாய்வின் முதல்கட்டமாக வரும் செவ்வாயன்று சூலு சுல்தானின் ஆலோசகர் சாய் கோனை விசாரணைக்கு வரும்படி பிலிப்பைன்ஸின். தேசிய புலனாய்வுத்துறை அழைத்திருக்கிறது.
பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு, தொடர்ந்து கொண்டிருக்கும் சபா மாநிலப் பிரச்சனை கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.