Home மலேசியா 1997ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போல ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி காணவில்லை: வாஹிட்

1997ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போல ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி காணவில்லை: வாஹிட்

633
0
SHARE
Ad

riggitகோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – கடந்த 1997-98ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல் ரிங்கிட் மதிப்பு மோசமாக வீழ்ச்சி காணவில்லை என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார் கூறியுள்ளார். அச்சமயம், ஆசிய வட்டாரத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் குறிப்பிட்ட அவர், அதுபோல் அல்லாமல் தற்போதைய வீழ்ச்சியிலிருந்து ரிங்கிட் விரைவில் எழுச்சி காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஆசிய வட்டார நிதி நெருக்கடி காலத்தில் (1997-98) நாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டோம். அச்சமயம் வர்த்தக பற்றாக்குறை, நிறுவனங்களிடையே நிலவிய மிக அதிகளவில் கடன் வாங்கும் போக்கு, அமெரிக்க டாலர் கையிருப்பு 30 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது என பல விஷயங்கள் அந்தப் பாதிப்புக்கு காரணிகளாக இருந்தன.”

“தற்போது உள்நாட்டு வங்கி அமைப்பும், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் இணைந்து நாட்டை பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்கின்றன. உள்நாட்டுப் பொருள் உற்பத்தியில் 5.5 விழுக்காடு என்ற அளவை நாம் எட்டிப்பிடிக்க இயலும். நாட்டின் தற்போதைய பொருளாதார, வர்த்தக நிலையில் சாதகமான பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன” என்று வாஹிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு, தற்போது 3.9280 ஆக உள்ளது. கடந்த 1998, செப்டம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு ரிங்கிட் மதிப்பு இந்தளவு மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அச்சமயம் நிலவிய ஆசிய பொருளாதார நெருக்கடி நிலையின்போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.8 என நிலைநிறுத்தப்பட்டது.