கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – மொழி பெயர்ப்பு ரீதியாக நமக்கு சந்தேகம் வந்தவுடன், உடனே நம் நினைவில் வருவது ‘கூகுள் ட்ரான்ஸ்லேடர்’ (Google Translator) தான். அந்தளவிற்கு, பயனர்களுக்கு எளிமையானதாகவும், எளிதில் கையாளக் கூடியதாகவும் இருக்கும் இந்த சேவை, அண்டிரொய்டின் அனைத்து கருவிகள் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் உட்பட அனைத்து ஐஒஎஸ் கருவிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்துக்கள், கேமரா மூலம் படம் பிடிப்பது, வார்த்தைகளாக உச்சரிப்பது என எந்த வடிவிலும் நமக்கு தேவையான மொழி பெயர்ப்பினை, இந்த கூகுள் ட்ரான்ஸ்லேடர் சாத்தியமாக்கியது. இப்படி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த செயலியை ஓரங்கட்டும் அளவிற்கு மைக்ரோசாப்ட், புதிய ட்ரான்ஸ்லேடர் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, கூகுள் ட்ரான்ஸ்லேடர் போன்று அனைத்து தளங்களிலும் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ‘இமேஜ் ரிகக்னைசன்’ (Image Recognition), உச்சரிப்பின் மூலம் மொழி பெயர்ப்பு செய்யும் வசதியும் போன்றவையும் இந்த செயலியில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கூகுள் ட்ரான்ஸ்லேடர் உச்சரிப்பின் மூலம் 27 மொழிகளைத் தான் மொழிபெயர்ப்பு செய்யும். மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி ஒரு படி முன்னேறி, 50 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்வதால், பயனர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயனர்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் தகவலாகும்.