கோலாலம்பூர் – எம்எச் 370 விமானம் விபத்தில் சிக்குவதிலிருந்து அதைக் காக்கவே தனது சகோதரர் முயன்றிருப்பார் என காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, தற்போது கடலில் விழுந்து விட்டதாக முடிவு செய்யப்பட்டுள்ள, அந்த விமானத்தின் தலைமை விமானியான சஹாரி அகமது ஷாவின் (படம்) சகோதரி சகினாப் ஷா கூறியதாக தகவல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமது சகோதரர் பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
“எனது சகோதரர் ஒருபோதும் பயணிகளுக்கு விரோதமாக நடந்திருக்க மாட்டார். அவர்களை துயரத்தில் ஆழ்த்த விரும்பியிருக்க மாட்டார். ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருப்பாரே தவிர மொத்தமாக பயணிகளை பலிகொடுத்திருக்க மாட்டார்,” என்று சகினாப் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் அருமையான மனிதர் என்று குறிப்பிட்டுள்ள அவர், உதவி தேவைப்படுவோருக்கு ஓடிச் சென்று உதவக் கூடிய மனப்பாங்கு கொண்டவர் என்றும் சஹாரி குறித்து கூறியுள்ளார்.
“அவர் ஓர் அப்பாவி. இளம் வயதிலிருந்தே விமானம் என்றால் அவருக்கு உயிர். விமானியாக துடித்துக் கொண்டிருந்தவர். பொம்மை விமானங்களை சிறு வயதில் ஓட்டி ரசிப்பார்.
விமானம் ஓட்டுவதுதான் அவரது பொழுதுபோக்கும், உயிரும் ஆகும். இதற்காக அவர் நிறைய பணத்தை செலவிட்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் பொருத்தியிருந்த சிமுலேட்டர் குறித்து சந்தேகம் எழுப்புவது தவறு. அவர் தீயவரல்ல. எனவே தவறு செய்திருக்கமாட்டார்,” என சகினாப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.