கோலாலம்பூர் – 1 எம்டிபி புகார்களை விசாரித்து வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இரண்டு அதிகாரிகள், பிரதமர் அலுவலகத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு பெருகி வரும் வேளையில், பிரதமர் நஜிப்புக்கு அம்னோவிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று சனிக்கிழமை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளின் மாற்றலுக்கு கைரி ஜமாலுடின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நஜிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த துணைப் பிரதமர் மொகிதின் யாசின் தனது அரசாங்கப் பதவிகளை இழந்ததுபோல், கைரியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து இன்று மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கைரி, “எது நியாயமோ அதற்காக நாம் குரல் கொடுக்கத்தான் வேண்டும். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரைச் சந்தித்து, அந்த இரண்டு அதிகாரிகள் மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்புவேன்” என்று இன்று மீண்டும் கூறினார்.
“பிரதமர் தன்னைச் சுற்றி ஆமாம் என்று சொல்பவர்கள் மட்டும் தேவையில்லை எனக் கூறியுள்ளார். எனவேதான் நான் குரல் கொடுக்கின்றேன். இந்த அதிகாரிகளின் மாற்றம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. நான் இப்படிக் கூறுவதால் ஏற்படப் போகும் எந்த விளைவுகளுக்கும் நான் தயார்” என்றும் கைரி கூறியுள்ளது அம்னோ வட்டாரத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.