Home Featured நாடு சுப்ரா தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் மாநாடு – 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சுப்ரா தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் மாநாடு – 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

540
0
SHARE
Ad

சுபாங் ஜெயா – இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற மஇகாவின் கிளைத் தலைவர்களுக்கான மாநாட்டில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டு கட்சியின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, 6 தீர்மானங்களையும் ஏகமனதாக நிறைவேற்றினர்.

MIC-branch-chairmen-convention-supporting resolution-

தீர்மானங்களை ஆதரித்து கிளைத் தலைவர்கள் கைதூக்கும் காட்சி

#TamilSchoolmychoice

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட கிளைத் தலைவர்கள் அனைவரும் 2015ஆம் ஆண்டுக்கான மறு-தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த மஇகா கிளைகளின் தலைவர்கள் ஆவர்.

இன்றைய கிளைத் தலைவர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதன் மூலம், கட்சி மீண்டும் வலிமையான, ஒற்றுமையான பாதையில் திரும்பியிருப்பதாக அரசியல் பார்வையாளர்களும் மஇகா தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் வழி, மஇகா 2009 மத்திய செயலவைக்கும், கட்சியின் இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்திற்கும், ஆதரவும் கிடைத்திருப்பதால், இனி கட்சியை வழிநடத்த அவர்களுக்கு புதிய உத்வேகமும், எழுச்சியும் கிடைத்திருக்கின்றது.

Subra-press-conf-branch-chairmen-convention-மாநாடு முடிந்தபின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ராவும் மத்திய செயலவையினரும்

தீர்மானங்கள் கூறுவது என்ன?

இன்று கிளைத் தலைவர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும் என்றும் இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருப்பதாகவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இன்றைய மாநாட்டின் முதலாவது தீர்மானம், இன்றைய கிளைத் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதற்கு ஒப்புதல் அளிப்பதோடு, இந்த மாநாடு முறையாக அமைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி, இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும், முடிவுகளும், பெரும்பான்மையான மஇகா கிளைத் தலைவர்களின் எண்ணங்களையும், முடிவுகளையும் பிரதிபலிப்பதாகவும், மறு-உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது என அறிவிக்கின்றது.

Subra-MIC-Branch Chairmen Conv-கிளைத் தலைவர்களின் ஆதரவு – மாநாட்டுக்கு வருகை தரும் டாக்டர் சுப்ரா…

இரண்டாவது தீர்மானம், சங்கப் பதிவகம் வெளியிட்ட 5.12.2014, 19.1.2015 மற்றும் 6 பிப்ரவரி 2015 தேதியிட்ட கடிதங்களில் விடுக்கப்பட்டுள்ள உத்தரவுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான, பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் மஇகா 2009 மத்திய செயலவை (25.6.2015 தேதியிட்ட சங்கப் பதிவகத்தின் கடிதத்தில் உள்ள உறுப்பினர்கள், பொறுப்பாளர்களின் பட்டியலின்படி) எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.

மூன்றாவது தீர்மானம், சங்கப் பதிவகத்தின் கடிதங்களின் உத்தரவுகளை மற்றும் வழிகாட்டுதல்களை சுமுகமாக நிறைவேற்றுவதற்கும், அமுலாக்குவதற்கும், அதன் தொடர்பில், மேற்கொண்டு 2009 மத்திய செயலவையால் கூடுதலாக எடுக்கப்பட்ட தேவையான, பொருத்தமான, அனைத்து நடவடிக்கைகள், தீர்மானங்கள், முடிவுகளையும் அங்கீகரித்து உறுதிப்படுத்துகின்றது.

Subra-speech-branch chairmen conventionதீர்மானங்களை முன்மொழிந்து டாக்டர் சுப்ரா உரையாற்றும் காட்சி

நான்காவது தீர்மானம், சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் அமுலாக்குவதற்கும், தேவையான, பொருத்தமான அனைத்து மேல் நடவடிக்கைகளையும், மஇகா 2009 மத்திய செயலவை எடுப்பதற்கு அதிகாரமும் அங்கீகாரமும் வழங்குகின்றது.

ஐந்தாவது தீர்மானம், மஇகா 2009 மத்திய செயற்குழு 17.6.2015 தேதியிட்டு சங்கப் பதிவகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கங்களை உறுதிப்படுத்தி, அங்கீகரிப்பதோடு, 25.6.2015 தேதியிட்ட கடிதத்தின் வழி சங்கப் பதிவகம்  வெளியிட்ட மாற்றம் செய்யப்பட்ட மஇகா பொறுப்பாளர்கள் பட்டியலை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கின்றது.

ஆறாவது தீர்மானம் மஇகா 2009 மத்திய செயலவையால் நடத்தப்படும் கூட்டங்கள், கட்சித் தேர்தல்கள் மட்டுமே அதிகாரபூர்வமானதாகவும், சட்டப்படி செல்லுபடியானதாகவும் கருதப்படும் என்பதை வலியுறுத்தி, 2009 மத்திய செயலவையால் நடத்தப்படும், அங்கீகரிக்கப்படும் வேட்புமனுத் தாக்கல்கள், தேர்தல்கள், கூட்டங்கள் மட்டுமே மஇகாவால் நடத்தப்படும் சட்டரீதியான நிகழ்ச்சிகளாக கருதப்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

Saravanan-speech-branch-chairmen-convention-தீர்மானங்களை ஆதரித்து மஇகா உதவித் தலைவரும், துணையமைச்சருமான டத்தோ சரவணன் உரையாற்றும் காட்சி

இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கங்களின் மூலம், 2015 ஆண்டுக்கான தேர்தல்களை நடத்தி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைத் தலைவர்கள் 2009 மத்திய செயலவைக்கும், இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவுக்கும் ஆதரவும், அதிகாரமும் அளித்திருக்கின்றனர்.

அதோடு, மஇகாவின் பெயரால் மற்ற குழுவினர்கள் நடத்தும் வேட்புமனுத் தாக்கல்கள், தேர்தல்கள், கூட்டங்கள் அனைத்தையும் இந்தத் தீர்மானங்களின் மூலம் மஇகா கிளைத் தலைவர்கள் நிராகரித்துள்ளதோடு, அவற்றை சட்டவிரோதமானதாகவும் அறிவித்துள்ளனர்.