கோலாலம்பூர்- பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப்பைக் கவிழ்க்க சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடன் சேர்ந்து தாம் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியை முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதன் காரணமாகவே தமது துணைப் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது என்பதையும் அவர் நிராகரித்துள்ளார்.
“சம்பந்தப்பட்ட மற்ற இருவரும் (அஸ்மின், லிம்) இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இப்படிப்பபட்ட செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனினும் நான் அவ்வாறு செயல்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடும், கட்சியும் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து எனது கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் எனது பதவி பறிக்கப்பட்டிருக்கலாம்,” என்றார் மொகிதின்.
முன்னதாக நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அஸ்மின் அலி மற்றும் லிங் குவான் எங்கைச் சந்தித்துப் பேசியதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.