கோலாலம்பூர், 9 ஆகஸ்ட் – அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் வானொலியில் தொல்காப்பியம் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ என்ற நூலை சுகாதார அமைச்சரும் மஇகா இடைக்காலத் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று வெளியிட்டார்.
டாக்டர் சுப்ரா ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ நூல் வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்துகின்றார்…
அமரர் சீனி ஐயாவின் படைப்புகளும், கருத்துகளும் அவரது மறைவிற்குப் பின்னரும் என்றும் வாழும் என்பதற்கு உதாரணமாக இந்த நூல் திகழ்வதாகவும் சுப்ரா நூலை வெளியிட்டு ஆற்றிய உரையில் கூறினார்.
தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்கள் நமது முன்னோர்கள் நமக்கு சேர்த்து வைத்த சொத்து, அதை நாம் மறந்துவிடக் கூடாது என்ற சீனி ஐயாவின் கருத்தை நினைவு கூர்ந்த சுப்ரா, மொழி நாகரிகம் இல்லாத ஒரு கால கட்டத்தில் தெளிவான இலக்கணத்துடன் தொகுக்கப்பட்ட தமிழ் நூல் தொல்காப்பியம் என்றும் கூறினார்.
சீனி ஐயா வாழ்ந்த காலகட்டத்தில் அவரது நூல் ஒன்றை பினாங்கில் தான் வெளியிட்டிருப்பதையும் சுப்ரா தெரிவித்தார்.
கோவையில் சில வருடங்களுக்கு முன்னால் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பில் சீனி ஐயாவின் கட்டுரையும் இடம் பெற்றிருப்பது அவரது தமிழ்ப் புலமையையும், திறனையும் எடுத்துக் காட்டும் சான்று என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மலாயாப் பல்கலைக் கழக விரிவுரையாளர் டாக்டர் கருணாகரனும், கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரியுமான பி.எம்.மூர்த்தியும் உரையாற்றினார்.
கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதனும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கமலநாதன் தனது உரையில், சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் போதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான பட்டப் படிப்பு நிலையில் தமிழ் போதிக்கப்படுவதற்கு மலேசியாவில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவின் பாடத்திட்டம் பின்பற்றப்படுவதாகவும் இது மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு கிடைத்த பெருமை என்றும் குறிப்பிட்டார்.
டத்தோ சரவணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்
இந்த நிகழ்ச்சியில் சீனி நைனா முகம்மது குடும்பத்தினர் சார்பில் துணையமைச்சர் டத்தோ சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். தனது உரையில் கடந்த காலங்களில் சீனி ஐயாவுடனான தனது நட்பையும் பழக்கத்தையும் நினைவு கூர்ந்த சரவணன், சீனி ஐயா இல்லாதபோதுதான் அவரது அருமை தெரிவதாகவும் அவரைப் போன்ற இன்னொரு அறிஞரை நமது நாடு காண முடியாது என்றும் கூறினார்.
நூல் வெளியீட்டுக்கு தனது பங்காக 10,000 ரிங்கிட்டை டத்தோ சரவணன் வழங்கினார்.
நூல் வெளியீட்டு விழாவை வழிநடத்திய மின்னல் வானொலி அறிவிப்பாளரும் ஏற்பாட்டுக் குழுவினரில் ஒருவருமான பொன்.கோகிலம், தனது தயாரிப்பில் மலர்ந்த ‘அமுதே தமிழே’ இலக்கிய நிகழ்ச்சியில் சீனி ஐயாவின் குரல் பதிவில் தொல்காப்பியம் குறித்த உரைகளைப் பதிவு செய்ததையும், பல மாதங்கள் இந்த நிகழ்ச்சி தொடர்ந்ததையும் நினைவு கூர்ந்தார்.
இந்த நூல் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் சீனி ஐயாவின் குடும்பத்தினரின் நலனுக்காக வழங்கப்படும் என்றும் பொன் கோகிலம் அறிவித்தார்.