Home Featured இந்தியா பினாங்கு துணை முதல்வரின் தடையை நீட்டித்தால் மக்கள் மன்றத்தில் நீதி கேட்பேன் – வைகோ!

பினாங்கு துணை முதல்வரின் தடையை நீட்டித்தால் மக்கள் மன்றத்தில் நீதி கேட்பேன் – வைகோ!

955
0
SHARE
Ad

vaiko-300x166ஈரோடு, ஆகஸ்ட் 10 –  பினாங்கு துணை முதல்வர் இராமசாமி மீது இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்காக, தான் இந்தியப் பிரதமர் மோடியிடம் பரிந்துரை செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் திராவிட இயக்க கருத்துப் பட்டறைக் கூட்டம் ஒன்றை நடத்திய வைகோ, தேசிய கட்சியான பா.ஜ-வுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததற்கான காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“மலேசியாவின் பினாங்கு  மாநில துணை முதல்வர் இராமசாமி, திருப்பூர் மாநாட்டில்RAMASAMY-300x221 பங்கேற்கிறார். அவருக்கு விசா வழங்கக் கோரியே பிரதமர் மோடியை சந்தித்தேன். செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நானும், பினாங்கு துணை முதல்வரும் சந்திக்க, மோடியிடம் அனுமதி கேட்டுள்ளோம்.”

“இது தொடர்பாக அனுமதி கோரி, 18 நாட்கள் ஆகின்றன. இதுவரை பதில் வரவில்லை. இதுகுறித்து, பிரதமரிடம் இரு நாட்களில் தொலைபேசியில் பேசுவேன். விசா கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  இம்மாதம் 31-ம் தேதி வரை விசாவிற்காக காத்திருப்பேன். விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என துணை முதல்வர் இராமசாமிக்கு விசா வழங்க மறுத்தால், 10 ஆயிரம் சுவரொட்டிகள் அடித்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்பேன்” என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் இராமசாமி, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாடு, தமிழகத்தில் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் காரணமாக, இந்தியாவிற்குள் நுழைவதற்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த தடையை தற்போதைய அரசும் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில், தான் நேரடியாக தலையிடுவேன் என வைகோ, கடந்த ஆண்டு பினாங்கு வந்திருந்த போதே தெரிவித்து இருந்தார். அதன்படி, தற்போது அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார்.

எனினும், தற்போது மதிமுக, பாஜக-வுடன் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதால், வைகோவின் கோரிக்கை செவிசாய்க்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.