சென்னை, ஆகஸ்ட் 10- மதுவிற்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் படுதீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காகக் காந்தியவாதி தனது உயிரையே கொடுத்திருக்கிறார். பல மாணவர்கள் மதுவை எதிர்த்துப் போராடிச் சிறையில் கிடக்கிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளும் இந்தப் போராட்டத்தை அறப்போராட்டமாகக் கருதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மதுவே கூடாதென்று மதுக்கடைகளை அடித்து நொறுக்குவதும், தீயிட்டுக் கொளுத்துவதுமாகப் போராட்டம் தீ வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் ஆர்யா மதுவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளது மக்களைக் கொந்தளிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
ஆர்யா தயாரித்து சந்தானத்துடன் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”.
இந்தப் படத்தை ஆர்யா, சந்தானம் இருவருடைய ஆஸ்தான இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சியே பீர் குடிப்பதைப் பற்றியதுதான்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுப் பேசிய ஆர்யா, மதுவை ஆதரித்துப் பேசியிருக்கிறார். அதாவது:
“புகைப்பிடிக்கிற, மது அருந்துகிற காட்சியைச் சினிமாவில் பார்த்து அதுபோல் செய்கிறார்கள் என்பது தவறு. படத்தில் கொலை செய்கிற காட்சிகள் வருகிறது. அதற்காக யாரும் அதுபோல் கொலை செய்வதில்லை. சிகரெட் பிடிக்கிற, மது அருந்துகிற காட்சி இல்லாமல் படமெடுத்தால் கலைஞர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படும்” என்று பேசியிருக்கிறார்.