சென்னை, ஆகஸ்ட் 10- இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமான விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளம் விமானிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காவல்படை ஒத்திகைக்காகக் கிளம்பிய இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் கடந்த ஜூன் 8-ஆம் தேதி மாயமாய் மறைந்து போனது. 33 நாடகள் தீவிரத் தேடுதலுக்குப் பின் அவ்விமானம் கடலுக்கு அடியில் இருந்து சிதைந்த பாகங்களாக மீட்கப்பட்டது. அதில் பயணித்த மூன்று விமானிகளின் எலும்புகளும் மீட்கப்பட்டன.
அந்த மூன்று விமானிகளின் பெற்றோருடைய டிஎன்ஏ சோதனைக்குப் பின், அவர்கள் மூவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த மூன்று விமானிகளின் குடும்பத்திற்கும் 10 லட்சம் நிதியுதவி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த டோர்னியர் விமானம் விபத்துக்குள்ளானதில் துணிச்சல்மிகு இளம் அதிகாரிகள் மூன்று பேர் இறந்தது உறுதி செய்யப்பட்ட செய்தியால் வேதனையடைந்தேன்.
அவர்களை இழந்து வாழும், குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியக் கடற்படை வீரர்கள் தமிழக அரசுடனும், தமிழகக் காவல்துறையுடனும் இணைந்து பல்வேறு மீட்புப் பணிகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டுப் பேருதவி புரிந்து வருகின்றனர். ஆகவே, பணியின் போது உயிரிழந்த மூன்று விமானிகளின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.