ஐதராபாத், ஆகஸ்ட் 11- இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, போக்குவரத்து விதிமுறையை மீறியதாகக் கூறி அவருக்குப் போக்குவரத்துக் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
ஒவ்வொரு வண்டிக்கும் அதன் எண் பலகை (number plate) இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், அதிலுள்ள எண்கள் தெளிவாகத் தெரியும்படி இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து வாகனச் சட்டம் சொல்கிறது.
போக்குவரத்து வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இல்லாமல், வாகனத்தின் உரிமையாளர்கள் அவர்களின் விருப்பப்படியான வடிவமைப்பில் எண் பலகையை அமைத்துக் கொண்டால் அது சட்டப்படி குற்றமாகும்.
அவ்வகையில், சானியா மிர்சாவின் கார் எண் பலகை போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் இருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் ஜூப்லி ஹில் பகுதியில் சானியா மிர்சாவின் கார் நின்றிருந்த போது, அவரது காரின் எண் பலகை போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆடம்பரமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்ததையும் ஒழுங்கற்ற வழியில் காட்டப்பட்டிருந்ததையும் கண்ட போக்குவரத்துக் காவலர் அதைப் புகைப்படம் எடுத்தார்.
மேலும், போக்குவரத்து விதிகளை மதிக்காத குற்றத்திற்காக அவருக்கு ரூ 200 அபராதம் விதித்து ரசீது (இ-சலான்) வழங்கினார்.