புதுடில்லி, ஆகஸ்ட் 11- மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் அளவுக்கதிகமாக இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, மேகி நூடுல்ஸ்க்கு நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டு, மேகி நூடுல்ஸ் உறைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRAI) 5 விதமான மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்து, உணவுப் பாதுகாப்பு 2011- ன் விதிகள் அனுமதித்துள்ள அளவுடன் மேகி நூடுல்ஸில் சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் ஒத்துப் போவதாகத் தெரிவித்துள்ளதால், மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரலாம் என்ற செய்தி வெளியாகி மக்களைக் குழப்பியது.
இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம், நெஸ்லே நிறுவனம் மீது தேசிய நுகர்வோர் விவகாரத் தீர்ப்பாணையத்தில் ரூ.640 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென்று வழக்குத் தொடர்ந்துள்ளது.
மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் முறையற்ற வாணிபச் செயல்பாடுகள் மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்திய நுகர்வோர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12-1-டி-யின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. பொதுவாக நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் தான் வழக்குத் தொடுப்பார்கள். ஆனால், இந்தப் பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகளும் வழக்குத் தொடுக்க முடியும்.
30 வருடங்கள் பழமையான இந்தச் சட்டத்தில் இப்போது தான் முதன்முறையாக மத்திய அரசு வழக்குத் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நூடுல்ஸ் பாதுகாப்புப் பற்றி நுகர்வோர் விவகார மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விவகாரம்” என்று கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.