ராமேஸ்வரம், ஆகஸ்ட் 12- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்தியப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அவ்விடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்துல் கலாம் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம் பேய்க்கரும்பு என்னும் இடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
எனவே, அவ்விடத்தில் அப்துல் கலாமிற்கு நினைவு மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தாரும் ஊர்ப் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள மத்தியப் பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர் கணேசன் உத்தரவுப்படி, இளநிலைப் பொறியாளர்கள் நேற்று கலாம் சமாதி அமைந்துள்ள மொத்த இடத்தையும் பொறியியல் கருவி மூலம் அளவை செய்தனர்.
சமாதி அமைந்துள்ள 1.84 ஏக்கர் நிலத்தைச் சுற்றி முதலில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.
அதன்பின்பு அங்கே பிரம்மாண்டமான முறையில் நினைவு மண்டபம், அருங்காட்சியகம், நுாலகம், தியான மண்டபம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.