ஆம்ஸ்டெர்டாம், ஆகஸ்ட் 12 – கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில், ஏவுகணை பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை விசாரணை செய்த ஆய்வாளர்கள் அவை ரஷ்யத் தயாரிப்பு என சந்தேகமடைந்துள்ளனர்.
இது குறித்து நேற்று டச்சு பாதுகாப்பு ஆணையம் மற்றும் அனைத்துலக விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், கண்டறியப்பட்டுள்ள ஏவுகணையின் பாகங்களை ஆய்வுக்குட்படுத்தியதில் அது ‘பக் சர்பேஸ் ஏர் மிசைல் சிஸ்டம்’ ஆக இருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
தரையிலிருந்து விண்ணுக்கு ஏவப்படும் இந்த பக் ரக ஏவுகணையின் பகுதிகளை வைத்து, விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 298 பேருடன் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த எம்எச்17 விமானத்தை கிழக்கு உக்ரைன் அருகே கிளர்ச்சியாளர் ஏவுகணை கொண்டு தாக்கி சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.