பெங்களூர், ஆகஸ்ட் 12- விளம்பரத்திற்காக விஷ்ணு போல் தோன்றி இந்துக்களின் மனதை டோனி புண் படுத்தி விட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்குப் பெங்களூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஒரு வியாபார நிறுவனத்தின் விளம்பரத்திற்காக விஷ்ணு போல் வேடமிட்ட டோனியின் படம் ஒரு வார இதழில் வெளியாகியிருந்தது.அந்தப் படத்தில் விஷ்ணுவின் ஆறு கைகளிலும் ஆறு விதமான பொருட்கள் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக ஒரு கையில் செருப்பு இருப்பது போல் காட்டப்பட்டிருந்தது.
டோனி விஷ்ணு போல் தோன்றியதற்கும், அதுவும் விஷ்ணுவின் கையில் செருப்பு இருப்பது போல் நடித்ததற்கும் எதிர்ப்புக் கிளம்பியது.
அதோடு மட்டுமல்லாமல், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஹிரோமாத் என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தனது மனுவில் அவர், “டோனியை விஷ்ணுவாகச் சித்தரித்து அவரது ஒரு கையில் செருப்பு வைத்திருப்பது போல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எந்தக் கடவுளும் கையில் செருப்பு வைத்திருப்பதில்லை.
எனவே, இது இந்து வழிபாட்டுக்கு எதிரான செயலாகும். டோனியும், வாரப் பத்திரிகையும் இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டனர். ஆகவே, அவர் மீதும் அந்த வாரப் பத்திரிகை மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பெங்களூர் நீதிமன்றம் விசாரணைக்கு நேரில் வருமாறு டோனிக்குச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.