சென்னை, ஆகஸ்ட் 12- அரசாங்கப் பதவியில் இருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட முடியாது என விஷால் அணியினர் கூறிவருகின்றனர்.
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகிய கலைஞர் கருணாநிதி, நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என நடிகர் சங்க நிர்வாகிகள் கூறியதோடு அவரது பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் சங்கத் தலைவராகிய சரத்குமார், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவே முடியாது என விஷால் அணியினர் கிடுகுப்பிடி போட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தின் வாக்காளர் பட்டியலையும், சட்டதிட்ட நகலையும் போராடி வாங்கிவிட்டனர் விஷால் அணியினர். நடிகர் சங்க சட்ட திட்டத்தின் படி, அரசுப் பணியில் சம்பளம் வாங்குகிற எவரும் நடிகர் சங்கத் தேர்தலில் எந்தப் பொறுப்பிற்கும் போட்டியிட முடியாது என்கிற விதி இருக்கிறதாம்.
அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் விஷால்.
சரத்குமார் தென்காசித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அல்லவா? அவருக்கு அரசுதானே சம்பளம் கொடுக்கிறது? இதை வைத்துப் பார்த்தால் அவரும் அரசு ஊழியர் ஆகிவிடுகிறார் தானே?
இந்தச் சட்ட விதியைக் கோடிட்டுக் காட்டி, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, சரத்குமாரை தேர்தலில் நிற்க விடாமல் செய்துவிடும் திட்டம் இருக்கிறதாம்!
‘ஒருவேளை அப்படியொரு சிக்கல் வந்தால், தனக்குப் பதிலாக ராதிகாவை நிற்க வைப்பாரோ சரத்?’ என்ற கேள்வியும் இதில் எழுந்துள்ளது.
ஏனென்றால், “அரசியலில் போட்டியிட முடியாத பெரிய மனிதர்கள் எல்லாம் மனைவிக்குதானே சீட் வாங்கிக் கொடுக்கிறார்கள்!” என்று நையாண்டியாகவும் திரையுலகினர் பேசிக் கொள்கின்றனர்.