வாஷிங்டன், ஆகஸ்ட் 13 – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (90) தனக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதாகவும், அந்த புற்று உடலின் மற்ற பகுதிகளிலும் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு புற்றுநோய் இருப்பது தொடர்பாக கார்ட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சமீபத்தில், எனக்கு நடத்தப்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சையின் போது தான், எனக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்று உடலின் மற்ற பாகங்களிலும் வேகமாக பரவி வருகிறது. தற்சமயம், அட்லாண்டாவில் இருக்கும் எமோரி ஹெல்த்கேரில் சிகிச்சை பெற இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜிம்மி கார்ட்டருக்கு புற்றுநோய் இருப்பது பற்றி வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, “நோய்யின் பிடியிலிருந்து நீங்கள் முழுதாய் மீண்டு வருவதை ஒட்டு மொத்த தேசமே எதிர்பார்த்து காத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜிம்மி கார்ட்டர் அமெரிக்காவின் 39-வது அதிபர் ஆவார். அவர் தனது ஆட்சி காலத்தில், அமெரிக்காவை சிறப்பாக வழி நடத்தினாலும், வெளியுறவுக் கொள்கைகளில் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால், இரண்டாவது முறையாக அதிபராகும் வாய்ப்பை இழந்தார். 1981-ம் ஆண்டு, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய அவர், அட்லாண்டாவில் சேவை மையம் ஒன்றை தொடங்கி, உலக அளவில் பல்வேறு சேவைகளை ஆற்றி வந்தார்.
உலக நாடுகளின் அமைதிக்காக இவர் பாடுபட்டதால், கடந்த 2002-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.