கலிபோர்னியா, ஆகஸ்ட் 12- ‘தன்னால் ஒரு மென்பொருள் பொறியாளராக ஆக முடியாமல் போய்விட்டதே’ என்று ஷாருக் கான், ஏக்கத்துடன் சுந்தர் பிச்சையிடம் கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ பட நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு ஷாருக்கானைப் பேட்டி கண்டார்.
அப்போது ஷாருக் கானிடம் சுந்தர் பிச்சை, ‘நீங்கள் உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள விரும்பினால், என்ன தொழில் செய்ய விரும்புவீர்கள்?’ எனக் கேட்டதற்கு,
“பொறியாளராக(என்ஜினியராக) இருந்த எனது தாத்தாவைப் பார்த்தே வளர்ந்தவன் நான்.அதனால் அவரைப் போலவே பொறியாளராக விரும்பினேன். ‘பார்க்க நான் முட்டாள் போலத் தெரிந்தாலும், உண்மையில் புத்திசாலி.
பள்ளியில் படித்தபோது மின்னணுவியல்(electronics) பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தொழிற்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யில் படிக்க ஆசைப்பட்டு நுழைவுத் தேர்வு கூட எழுதினேன். ஆனால், அதெல்லாம் முடியாமல் போய்விட்டது” என நகைச்சுவையாகவும் ஏக்கமாகவும் பதில் அளித்தார்.
ஷாருக்கானுடனான இந்த அரட்டை நிகழ்ச்சியைக் கூகுள் இணையதளம் பதிவு செய்து வெளியிட்டது.
தற்போது, சுந்தர் பிச்சை கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்தச் செய்தி மீண்டும் ஊடகங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.
.