கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – எம்எச்370 விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி, பிரஞ்சு தீவான ரியூனியனில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிபுணர் சாயிம் ரேதா அப்துல் ரஹ்மான், புதிய கூற்று ஒன்றை பெர்னாமாவிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதாவது, எம்எச்370 விமானம் பல மணி நேரங்கள் வானில் பறந்த பின்பு எண்ணெய் முற்றிலும் தீர்ந்தவுடன், கடலில் விழுந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் மூழ்கியிருக்கலாம் என்கிறார் சாயிம் ரேதா.
இவர் தான் எம்எச்370 விமானம் காணாமல் போன அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த அனைத்துலக செயற்கைக்கோள் தகவல்தொடர்பு நிறுவனமான இம்மார்சட்டின் விமானத் தரவுகளை ஆராய்ந்து எம்எச்370 இறுதியாகச் சென்ற இடம் பற்றிய தகவலை அறிய உதவியவர்.
அதன் அடிப்படையில் தான் கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், எம்எச்370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று அறிவித்தார் என்றும் பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.
விமானம் சுக்கு நூறாக நொறுங்கியிருக்க வாய்ப்பில்லை
“யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதியை ஆய்வு செய்யும் பொழுது, அது மிகக் குறைவான அளவில் தான் சேதமடைந்துள்ளது. அதன் தோற்றத்தைப் பார்க்கும் போது, அந்தப் பாகம் விமானத்தில் இருந்து மிகக் கடுமையாகத் தகர்ந்து வெளியேறவில்லை என்பதைக் காட்டுகிறது. அதன் முனைகள் மிக இலகுவாக விமானத்திலிருந்து வெளியேறியுள்ளன.” என்று சாயிம் ரேதா கூறியுள்ளார்.
ஒருவேளை, கடலில் வேகமாக விழுந்து நொறுங்கியிருந்தால், நிச்சயமாக விமானத்தின் பாகங்கள் பல துண்டுகளாகச் சிதறி கரை ஒதுங்கியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எண்ணெய் முற்றிலும் தீர்ந்து போன நிலையில் எம்எச்370 விமானம் மெதுவாக கடலில் இறங்கி, சிறிது நேரம் மிதந்த பின்னர் மூழ்கியிருக்கலாம் என்றும் சாயிம் ரேதா தெரிவித்துள்ளார்.
சாயிம் ரேதாவின் கூற்றைப் பார்க்கும் பொழுது, கடந்த ஆண்டு ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் விமானம் ஒன்று இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதைப் பார்த்ததாக காவல்துறையில் புகார் அளித்தது நினைவுக்கு வருகின்றது.