புதுடெல்லி,ஆகஸ்ட் 13- எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த மசோதாவும் நிறைவேறாமல் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
நேற்றைய நாடாளுமன்ற நடவடிக்கையின் போது, பாரதீய ஜனதா உறுப்பினர் ஒருவரின் பேச்சால் ஆவேசமடைந்த சோனியா காந்தி, சபையின் மையப்பகுதிக்குச் சென்று கோபாவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முழுக்க லலித் மோடி விவகாரம் தான் தலையாய பிரச்சினையாகப் பேசப்பட்டது. நேற்றும் அப்படித்தான்.
லலித் மோடி தொடர்பாக நாடாளுமன்றக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிக் கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டு, கருப்புப் பணம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டும் விதத்தில் பேசினார்.
அதைக் கேட்டு ஆவேசமடைந்த சோனியா காந்தி, அவரது பேச்சுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சபையின் மையப்பகுதிக்குச் சென்று சத்தமாகக் குரல் எழுப்பினார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.
இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிற்பகல் 2.45 மணி வரை சபையை ஒத்திவைத்தார்.