Home இந்தியா ரூ 80 கோடி சாமி சிலைகள் திருட்டு: இயக்குநர் வீ.சேகர் கைது!

ரூ 80 கோடி சாமி சிலைகள் திருட்டு: இயக்குநர் வீ.சேகர் கைது!

624
0
SHARE
Ad

mqdefaultசென்னை, ஆகஸ்ட் 13- ரூ 80 கோடி மதிப்பிலான 8 சாமி சிலைகளைத் திருடியதாகப் பிரபல திரைப்பட இயக்குநர் வீ.சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சென்னை மேற்கு மாம்பலத்திலிருந்து, ரூ.80 கோடி மதிப்புள்ள 8 பஞ்சலோகச் சிலைகளைக் கடத்தி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த  தனலிங்கம் என்பவரைக் கைது செய்தனர்.

இவர், திரைப்படத் துறையில் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றி வருபவர். அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தில் அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். அதில், இந்தச் சிலைத் திருட்டில் பிரபலத் திரைப்பட இயக்குநர் வீ.சேகருக்கு முக்கியப் பங்கு இருப்பது அம்பலமானது.

வீ.சேகர் வீட்டில் தான் திருட்டுச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் வீட்டில் வைத்துத் தான் திருட்டுச் சிலைகளை விற்பதற்கான பேரம் பேசப்பட்டதாகவும் தனலிங்கம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் வீ.சேகர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இத்திருட்டில் கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் பல குடும்பப்பாங்கான படங்களை இயக்கியவர் வீ.சேகர். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்குப் பக்திப்பழம் போல் காட்சி தருவார்.

அவரா இப்படித் திருடியவர்? என்று திரையுலகினர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமோ?