நியூயார்க், ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்ததால், மத்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் மேகிக்குத் தடை விதித்தது. இதனால் இந்தியாவில் அதன் விற்பனை அடியோடு முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து நெஸ்லெ நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
அவ்வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மத்திய அரசு, மேகி நூடுல்ஸ் நெஸ்லே நிறுவனம் மீது, தவறான விளம்பர உத்திகளைக் கையாண்டு மக்களைக் குழப்ப முயற்சிப்பதாகக் கூறி, ரூ 649 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்தது.
இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் இன்று மேகி நூடுல்க்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. இது மேகி நிறுவனத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றியாகும்.
அவ்வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு பாதுகாப்பான அளவுக்குள் இருப்பதாக அமெரிக்க உணவுத் தர ஆணையத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, மின்னஞ்சல் மூலம் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விற்கப்படும் மேகி நூடுல்ஸ்களின் மாதிரியைச் சோதித்துப் பார்த்த போது, அதில் ஆபத்து விளைவிக்கும் அளவுக்குக் காரீயம் கலந்திருக்கவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைப் போல் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, வியட்நாம் ஆகிய நாடுகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ்கள் பாதுகாப்பானவை என ஏற்கனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.