கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – டுவிட்டரில் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை 140 எழுத்துக்களுள் தான் அனுப்ப வேண்டும் என்ற வரம்பை தளர்த்த இருப்பதாக அந்நிறுவனம், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தது. தற்போது, அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
பேஸ்புக்’ (Facebook), ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வார்த்தைகளுக்கோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கோ எந்தவொரு எழுத்துக்கள் வரம்பும் இல்லை. டுவிட்டரைப் பொருத்தவரை 140 எழுத்துக்களுள் தான் அனுப்ப வேண்டும் என்பது மிகப்பெரும் குறைபாடாக இருந்து வந்தது. பயனர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் காரணமாக, டுவிட்டர் இரண்டு மாத முயற்சிகளுக்குப் பிறகு இந்த மாற்றத்தை செயல்படுத்தி உள்ளது.
இந்த புதிய மாற்றத்தின்படி, தனிப்பட்ட குறுஞ்செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மின் அஞ்சல் சேவையில் நாம் எத்தகைய செய்திகளை அனுப்புவோமோ அதனை டுவிட்டர் வழியாகவே அனுப்ப முடியும்.
அதே நேரத்தில், டுவிட்டுகளில் எத்தகைய மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு டுவிட்டை பயனர்கள் 140 எழுத்துக்களுக்குள் தான் பதிவு செய்ய முடியும்.