கலிஃபோர்னியா, ஆகஸ்ட் 14 – தொழில்நுட்பங்களின் உலகமாக இருக்கும் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் (Silicon Valley) பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிக அளவில் பணி அமர்த்தப்படுவதில்லை. பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆணாதிக்கம் அதிகமுள்ளதாகவும், இன பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பெரும் விமர்சனங்களை சந்தித்து வந்த இந்த விவகாரத்தில், ஆப்பிள் நிறுவனம் மீதும் தொடர் அழுத்தங்கள் இருந்து வந்தன. இத்தகைய விமர்சனங்களுக்கு முடிவு கட்டும் வகையில், ஆப்பிள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டை விட உலக அளவில் இருக்கும் ஆப்பிள் கிளைகளில் பெண்கள் பணி அமர்த்தப்படும் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கடந்த ஜனவரி மாதம் முதல் பணி அமர்த்தப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், சிறுபான்மையின மக்களாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் சிறுபான்மையினராக கறுப்பின மற்றும் ஹிஸ்பானிக் (ஸ்பானிஷ் மொழி பேசும் அமெரிக்கர்கள்) மக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எத்தகைய தடுமாற்றமும் இல்லாமல் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டு அதனை வளர்ப்பதில் எங்கள் நிறுவனம் காட்டிய ஈடுபாடு பெருமை அளிப்பதாக உள்ளது. எனினும், இதில் மேலும் முன்னேற்றம் அடைய நாங்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆப்பிள் போன்று ‘இன்டெல்’ (Intel) நிறுவனமும் அதிக அளவில் பெண்கள், சிறுபான்மையினரை ஊழியர்களாக தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.