Home Featured தமிழ் நாடு வீ.சேகர் ஓர் அப்பாவி; எந்தக் குற்றமும் செய்திருக்க மாட்டார்: திரையுலகினர் புலம்பல்!

வீ.சேகர் ஓர் அப்பாவி; எந்தக் குற்றமும் செய்திருக்க மாட்டார்: திரையுலகினர் புலம்பல்!

998
0
SHARE
Ad

14-1439521506-directorpressmeet-t-600சென்னை, ஆகஸ்ட் 14- “வீ.சேகர் ஓர் அப்பாவி; அவருக்குச் சூதுவாது தெரியாது; அதனால் உண்மையைத் தீர விசாரிக்க வேண்டும்” என்று கூறித் தமிழ்த் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குடும்பப்பாங்கான படங்களை எடுத்துப் பிரபலமானவர் இயக்குநர் வீ சேகர். இவர் திடீரெச் சிலைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டது திரையுலகினருக்கும் அவர் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி.

ஆனால், அவர் சிலைத் திருட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதால் தான், சிலைக் கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். மேலும் ,அவரது ஒப்புதல் வாக்குமூலத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், திரையுலகினர் இதை நம்ப மறுக்கிறார்கள்.

அந்த வாக்குமூலத்தை அவர் தரவில்லை என்றும், அவர் ஓர் அப்பாவி என்றும்,யார் உண்மையான குற்றவாளி என்ற உண்மையைத் தீர விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன் அவர்களும், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி அவர்களும் புழல் சிறைக்குச் சென்று வீ.சேகரைச் சந்தித்திருக்கிறார்கள்.

அப்போது அவர், “இந்தத் திருட்டிற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; நான் ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை” என்று கண்ணீர் மல்கக் கூறினாராம். இச்செய்தியைச் செய்தியாளர்களிடம் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

வீ.சேகரைச் சந்தித்து வந்த பின்பு, தமிழ்த் திரையுலக அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து காவல்துறைக்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: “மதிப்புமிகு தமிழகக் காவல் துறைக்கு அன்பான வேண்டுகோள். தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர் முதலிய பன்முகத் திறமை கொண்ட வீ.சேகர் ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல் சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்களைத் தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்குச் சொன்னவர். அதன் மூலம் மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். இப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது திடீர் என்று சிலைக் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கின்றது.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் வீ.சேகர் இந்தக் குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று எங்களிடம் கண்ணீர் வடிக்கிறார்.தான் எந்த ஒப்புதலும், எழுத்து மூலமாகவும் வாக்குமூலமாகவும் கொடுக்கவில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்.

எனவே, தயவு செய்து உண்மையைக் கண்டுபிடித்திட தமிழ்த் திரைப்படத்துறையைச் சார்ந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குநர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஸ்காட்லாண்டு காவல் துறைக்கு இணையான நமது மதிப்புமிகு தமிழகக் காவல் துறையை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.