புதுடெல்லி, ஆகஸ்ட் 15- அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அடையாள அட்டை தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்கும் பணியை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டைத் தடுக்கவும், போலி வாக்காளர்களைக் களையெடுக்கவும்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்மூலம், ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தனது பெயரைப் பதிவு செய்வதைத் தடுக்க முடியும்.
ஆகையால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்டங்களை இனிப் பெற முடியும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது.ஆனால், இன்னும் பலர் ஆதார் அட்டையை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெறவில்லை.
ஆதார் அட்டை பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது; உடனடியாகப் பெறுவதில் நடைமுறைச் சிக்கலும் இருக்கிறது.
எனவே, அரசின் சலுகைத் திட்டங்களுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. பொது விநியோகத் திட்டம், மண்எண்ணெய், சமையல் எரிவாயு உருளைகளைப் பெறக் கூட இந்த ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. ஆதார் அட்டைக்காகப் பதிவு செய்கிற தகவல்களைக் குற்ற வழக்கு விசாரணை தவிர்த்துப் பிற எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது’’ என உத்தரவிட்டனர்.
எனவே, அடுத்த உத்தரவு வரும் வரை இந்தப் பணிகளை உடனே நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் போன்ற பணிகள் வழக்கம் போல நடைபெறும்.