Home Photo News “16 வயதினிலே” மயிலு – ஸ்ரீதேவிக்கு வயது 52!

“16 வயதினிலே” மயிலு – ஸ்ரீதேவிக்கு வயது 52!

1176
0
SHARE
Ad

Sri Devi-Puli movie-ஸ்ரீதேவி! தமிழ்ப்பட இரசிகர்களால் என்றுமே மறக்க  முடியாத பெயர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, எம்ஜிஆர், சிவாஜி முதற்கொண்டு அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார்.

பின்னர், பதின்ம வயதில், மேலும் அழகான இளம் பெண்ணாக தமிழ்ப்படங்களில் மறுபடியும் உலா வந்தார். அவரை உச்சக் கட்ட புகழுக்குக் கொண்டு சேர்த்தது பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ திரைப்படம்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து புகழின் உச்சியை அடைந்தவருக்கு அடுத்த கட்டமாக அமைந்த இந்திப்பட வாய்ப்பு அவரை அகில இந்திய நட்சத்திரமாக்கியது.

#TamilSchoolmychoice

1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது திரைப்படப் பயணத்தின் சில படக் காட்சிகள் இங்கே உங்கள் பார்வைக்கு:

Sri Devi - young Lord Murugan-

“கந்தன் கருணை” என்ற ஏ.பி.நாகராஜனின் பக்தி மணம் கமழும் படம். பட்டி தொட்டியெங்கும் வெற்றி வாகை சூடிய படம். அதில் முருகனாக அழகாகத் தோன்றி, மழலைத் தமிழில் சிறப்பாக பேசி நடித்த பையன் யார் என ஊரே கேட்டது. ஆனால், அவர் ஒரு பெண் – பெயர் ஸ்ரீதேவி என அறிந்து பின்னர் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

Sri devi-MGR-Sri Devi

குழந்தை நட்சத்திரமாக அன்றைய தமிழ்ப்பட சூப்பர் ஸ்டார் எம்ஜிஆருடன் நம் நாடு படத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் எம்ஜிஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவராக ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற பாடல் காட்சியிலும் எம்ஜிஆருடன் நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டார் ஸ்ரீதேவி.

Sri devi-young-sivaji - babu movie“பாபு” – பாலாஜி, சௌகார் ஜானகியின் பணக்கார மகளாக வந்து, பின்னர் வறுமையில் சிக்கும் குழந்தையாக, பார்ப்பவர்களைக் கண்கலங்க வைக்கும் காட்சிகளில் ஸ்ரீதேவி சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார். Sri Devi-16 vayathinile-

தமிழ்ப்படங்களிலேயே ‘டிரெண்ட் செட்டர்’ என அழைக்கப்பட்டு – தமிழ்ப்படங்களின் பாதையையும், பயணத்தையும் முற்றாகப் புரட்டிப் போட்ட படம் பதினாறு வயதினிலே. அந்தப் படத்தைப் போலவே அதில் நடித்த ஸ்ரீதேவியையும் இரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இளம் பெண்ணாக தனது அடுத்த கட்ட திரைப்படப் பயணத்தைத் தொடக்கினார் ஸ்ரீதேவி.

Sri Devi-Anil Kapoor-Hindi Movie

தமிழில் வரிசையாக கமலஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நட்சத்திரங்களுடன் வலம் வந்த ஸ்ரீதேவி ஹிம்மத்வாலா என்ற இந்திப்படத்தில் நடித்தார். அவரது அழகு, அவர் காட்டிய தாராளக் கவர்ச்சி, இந்தியில் உச்சரித்து நடித்தது, என இப்படியாக அனைத்தும் சேர்ந்து கொள்ள அடுத்து வந்த சில ஆண்டுகளுக்கு அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கூறியது இந்தித் திரைப்பட உலகம். அப்படியே தமிழ்ப்பட உலகையும் மறந்தார்.

Sri Devi-marriage-boney kapoor

அழகுப் பதுமை – உச்ச நட்சத்திரம் – கோடிக்கணக்கான சொத்துக்கள் – யார் அவரை மணக்கப் போகும் அதிர்ஷ்டசாலி என்பதைத் தெரிந்து கொள்ள  அனைத்து இந்தியாவும் காத்திருந்தது. பல கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. இருப்பினும் இறுதியில் அவருடன் பல படங்களில் நடித்த அனில் கபூரின் அண்ணன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு இரண்டாவது மனைவியாக மண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார் ஸ்ரீதேவி.

Sri Devi with Boney Kapoor and family

மகிழ்ச்சியான மணவாழ்க்கையில் இரண்டு பெண்குழந்தைகள் – ஆசைக் கணவர் என திரைப்பட உலகில் இருந்து கொண்டு கொஞ்சகாலம் ஒதுங்கியிருந்தாலும், ஸ்ரீதேவியின் அழகும், கவர்ச்சியும், மெருகும் கொஞ்சமும் குறையவில்லை. அவரைப் பற்றிய செய்திகளும், வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவரது புகைப்படங்களும் தகவல் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றன,

Sri Devi-Boney Kapoor-

வயது கூடிக் கொண்டே போனாலும், கணவருடன் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, புகைப்படக்காரர்கள் மொய்க்கும் அளவுக்கு, ஆடை அணிகலன்களுடன், இரசிகர்கள் மெய்மறந்து நிற்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக உடையணிந்து உலா வருபவர் என்ற பெயர் ஸ்ரீதேவிக்கு உண்டு. அதற்கேற்ற உடல்வாகை இன்றும் பேணிவருவதும், கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் அவர் வழக்கம். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்த்து விடுவேன் என அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Sri Devi-English Vinglishஅவரது திரையுலக மறுபிரவேசத்துக்கு, அற்புதமான தேர்வாக அமைந்தது, இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம். இந்தி, தமிழ், என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் சக்கைப் போடு போட்டது இந்தப் படம்.

சுவையாக லட்டு மட்டுமே செய்யத் தெரிந்த – ஆங்கிலமொழி தெரியாத – ஒரு நடுத்தர வயது இந்தியக் குடும்பப் பெண்மணி, நியூயார்க் நகரில் எப்படி ஆங்கிலம் கற்றுக் கொள்கின்றார் – எவ்வாறு உருமாறுகின்றார் என்பதை கலகலப்புடன் கூறிய இந்தப் படத்தில் தனது தனித்துவ நடிப்பால் இரசிகர்களை மீண்டும் கவர்ந்து திரையுலகில் மறுபிரவேசம் செய்தார் ஸ்ரீதேவி.

Sri Devi - SIIMA-KL IMG_3545

கோலாலம்பூரில் ஸ்ரீதேவி – கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருது விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஸ்ரீதேவியின் அழகுத் தோற்றம்…

Sri Devi-Puli movie-

தமிழ்ப்படவுலகமும், குறிப்பாக விஜய் இரசிகர்களும் தவமாய் தவமிருந்து காத்திருக்கும் படம் “புலி”. இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மற்றொரு சிறப்பு இதில் ஸ்ரீதேவி நடித்திருக்கின்றார் என்பது. ஒரு நாட்டின் அழகான அரசியாக நடிக்கின்றார் என்பதாலும், அவரை மீண்டும் இந்த நேரடித் தமிழ்ப்படத்தின் மூலம் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றார்கள் தமிழ்ப்பட இரசிகர்கள்,

தொகுப்பு: செல்லியல்