நியூ யார்க், ஆகஸ்ட் 17 – வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக விளங்கும் அமேசான், தனது ஊழியர்களிடத்தில் கோரமுகத்தை காட்டி வருகிறது. அமேசான் ஊழியர்களுக்கான பணிச் சூழல் மிக மோசமானதாக உள்ளது என பிரபல செய்தி நிறுவனமான நியூ யார்க் டைம்ஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக நியூ யார்க் டைம்ஸ், சமீபத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், “இணைய வர்த்தகத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசானில் ஊழியர்களுக்கான பணிச் சூழல் மிக மோசமானதாக உள்ளது. முன்னாள் ஊழியர்கள் எங்களுக்கு அளித்துள்ள தகவல்படி, தங்கள் அருகில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களும் எப்போதும் சோகமான மனநிலையுடன் தான் இருப்பார்கள் என்று கூறியுள்ளனர். பெரும்பாலான பெண் பணியாளர்களுக்கு பணிச் சுமை காரணமாக கருச்சிதைவு ஏற்படுகிறது.”
“நள்ளிரவில் ஊழியர்கள் அலுவல் ரீதியிலான மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்ப வில்லை என்றால், செல்பேசிகளுக்கு உடனடியாக ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை என குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதுபோன்ற மோசமான வழிமுறைகளினால், அமேசான் நிறுவனம், ஊழியர்களை வதைக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தது.
நியூ யார்க் டைம்சின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பெஜோஸ், “குறிப்பிட்ட அந்த கட்டுரை அமேசானை குறிப்பிடுவதாக நான் கருதவில்லை. ஊழியர்களும் அந்த கட்டுரையை படிக்க வேண்டும். நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடுவது போன்று ஒரு நிறுவனம் இருந்தால் நானே அதை விட்டு வெளியேறிவிடுவேன்” என்று கூறியுள்ளார்.