புதுடில்லி, ஆகஸ்ட் 18- தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வணிக வளாகம் மற்றும் இந்துக் கோவில் அருகே நடந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வெடிகுண்டுத் தாக்குதலில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரும், மலேசியாவைச் சேர்ந்த இருவரும் இறந்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாகத் தாய்லாந்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் மிகவும் குறைவு. கடந்த ஆண்டு மே மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தாய்லாந்தில் அவ்வப்போது கலவரங்கள் மட்டுமே நடந்தன. மிகப் பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இந்நிலையில், தற்போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாய்லாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் மோடி கடுங்கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் டுவிட்டரில், ‘‘பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனதுஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் அனைவரும் வேகமாக குணம் அடைந்திடப் பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.