Home Featured நாடு இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!

இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!

774
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவருமான ஏ.கே.இராமலிங்கம் சங்கப் பதிவகம் மீது தொடுத்திருந்த வழக்கில் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் சில குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

subraகடந்த 25 ஜூன் 2015 தேதியிட்டு சங்கப் பதிவகத்தால் வெளியிடப்பட்ட கடிதத்தில் சங்கப் பதிவகம் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தை இடைக்காலத் தேசியத் தலைவராக அங்கீகரித்திருந்தது.

மஇகா அமைப்பு விதிகள் பிரிவு 91இன்படி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தால், முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தனது மஇகா உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டார் என 2009 இடைக்கால மத்திய செயலவை செய்திருந்த முடிவையும் சங்கப் பதிவகம் அதே கடிதத்தில் உறுதி செய்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் சங்கப் பதிவகத்தின் அந்த முடிவுகள் செல்லாது என அறிவிக்கக் கோரும் சீராய்வு மனு (Judicial Review) ஒன்றை கடந்த ஜூலை 30ஆம் தேதி இராமலிங்கம் (படம்) நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். சங்கப் பதிவகத்தின் 25.6.2015 தேதியிட்ட அந்தக் கடிதம் செல்லாது எனவும் அறிவிக்கக் கோரி தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

K.Ramalingam MIC Batuநேற்று அந்த மனு, நீதிபதியின் அறையில் (Chambers) விசாரிக்கப்பட்டது. சங்கப் பதிவகத்தின் சார்பாக வழக்காடிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அமர்ஜிட் சிங், சங்கப் பதிவகத்தின் கடிதத்தில் இராமலிங்கத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த வழக்கைத் தொடுக்க அவருக்குத் தகுதியில்லை என்றும் வாதாடினார்.

அந்தக் கடிதத்தில் கண்டுள்ள உள்ளடக்கங்களுக்கும் இராமலிங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் அமர்ஜிட் சிங் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து இராமலிங்கத்தின் வழக்கறிஞர் செல்வம் சண்முகம், தனது கட்சிக்காரர் சார்பாக தான் வழக்கை மீட்டுக் கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி (Struck-out) செய்ததோடு, 10,000 ரிங்கிட் செலவுத் தொகையை இராமலிங்கம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இராமலிங்கத்தின் விளக்க அறிக்கை 

தகவல் ஊடகங்களில் இந்தத் தீர்ப்பின் விவரங்கள் நேற்று வெளியான வேளையில், நேற்று மாலையில் இராமலிங்கம் ஒரு பத்திரிக்கை அறிக்கையை நட்பு ஊடகங்களின் வழி வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இராமலிங்கத்தின் வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டதா அல்லது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதா என்ற குழப்பமும் சர்ச்சையும் எழுந்தது.

MIC logoகாரணம், நீதிமன்ற சட்டங்களின் படி ஒரு வழக்கை அந்த வழக்கைத்தொடுத்தவர் மீட்டுக் கொண்டால், அந்த வழக்கின் அதே சாராம்சங்கள் அடங்கிய புதிய வழக்கொன்றை அவரால் மீண்டும் தொடுக்க முடியும். ஆனால், ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டால் அதே வழக்கையோ, அந்த வழக்கின் சாராம்சங்கள் அடங்கிய புதிய வழக்கையோ, வாதியால் (வழக்கைத் தொடுப்பவர்) மீண்டும் தொடுக்க முடியாது.

மாறாக, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் அடுத்த கட்டமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய மட்டுமே முடியும். எனவே, வழக்கில் சில குறைகள் இருந்தால், பொதுவாக வழக்கறிஞர்கள் அவர்களாகவே தங்களின் வழக்கை நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்வார்கள். ஆவணங்களில் குறைபாடுகளை சீர் செய்த பின்னர் மீண்டும் அதே வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்வார்கள்.

செல்வம் சண்முகத்தின் விளக்கம்

இது குறித்து, இராமலிங்கத்தின் சார்பில் நேற்றைய வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் செல்வம் சண்முகத்தை செல்லியல்.காம் நேரடியாகத் தொடர்பு கொண்டபோது, வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

“சங்கப் பதிவகத்தின் சார்பில் வழக்காடிய கூட்டரசு வழக்கறிஞரின் வாதங்கள் மற்றும் நீதிபதியின் கருத்துகளைக் கேட்டறிந்தபின் அந்த வழக்கை நாங்கள் மீட்டுக் கொண்டோம். எனது கட்சிக்காரர் இராமலிங்கம் விரும்பினால், இந்த வழக்கைப் புதிதாக நாங்கள் மீண்டும் தொடுக்க முடியும்” என்றும் செல்வம் செல்லியலிடம் விளக்கினார்.

இந்த வழக்கு குறித்து நேற்று பெர்னாமா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “தனது மஇகா உறுப்பிய அந்தஸ்து குறித்து சங்கப்பதிவகத்திடமிருந்து கடிதத்தைப் பெற்ற பின் இராமலிங்கம் மீண்டும் இந்த வழக்கைத் தொடுக்கக் கூடும்” என அவரது வழக்கறிஞர் செல்வம் சண்முகம் கூறியதாக தெரிவித்திருக்கின்றது.

ஐவர் இன்னும் மஇகா உறுப்பினர்களா?

ROS LETTER -MIC PALANIVEL LOST MEMBERSHIP

நேற்றைய வழக்கின் முக்கிய ஆவணமான 25.6.2015 தேதியிட்ட சங்கப் பதிவகக் கடிதம் 

நேற்றைய இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம், தாங்கள் இன்னும் மஇகா உறுப்பினர்கள்தான் என்பதை பழனிவேலு, இராமலிங்கம் உள்ளிட்ட ஐவர் மேற்கொண்ட மற்றொரு முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கின்றது.

நேற்றைய தீர்ப்பின்படி பார்த்தால், 25.6.2015 தேதியிட்ட சங்கப் பதிவகம் வெளியிட்ட கடிதத்தில் பழனிவேலுவின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்தக் கடிதம் செல்லாது என்றோ, தான் இன்னும் உறுப்பினர்தான் என்றோ நிரூபிக்க வேண்டியிருந்தால், பழனிவேல் நேரடியாகத் தன் பெயரிலேயே சங்கப் பதிவகத்திற்கு எதிராகவோ, மஇகாவுக்கு எதிராகவோ வழக்கு தொடுக்க வேண்டியதிருக்கும்.

இராமலிங்கத்தைப் பொறுத்தவரை, அவர், இன்னும் மஇகாவில் உறுப்பினரா இல்லையா என்பதை உறுதிப் படுத்தும் கடிதத்தை இனி அவர் சங்கப் பதிவகத்திடம் இருந்தோ அல்லது மஇகா தலைமையகத்திடம் இருந்தோ பெற வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படும் கடிதத்தில், இராமலிங்கம் மஇகா உறுப்பினர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதன்பின்னரே அவர் அந்த முடிவை எதிர்த்து இனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

இதற்கிடையில் மஇகா-சங்கப் பதிவக விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுத்த காரணத்தால், பழனிவேல், சோதிநாதன், எஸ். பாலகிருஷ்ணன், இராமலிங்கம், பிரகாஷ் ராவ் ஆகிய ஐவரும், மஇகா அமைப்பு விதி பிரிவு 91இன்படி மஇகாவில் உறுப்பிய அந்தஸ்தை இயல்பாகவே இழந்து விட்டனர் என மஇகாவின் 2009 மத்திய செயலவை மேற்கொண்ட முடிவு தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகின்றது.

அந்த முடிவை ஏற்றுக் கொண்ட சங்கப் பதிவகத்தின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த நீதிமன்றமும் (நேற்றைய தீர்ப்பு உட்பட) எதிர்மறையான தீர்ப்பு எதனையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-இரா.முத்தரசன்