புதுடில்லி, ஆகஸ்ட் 19 – இந்திய இராணுவத்தில் 5 வாரங்கள் இராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பயிற்சியின் ஒரு அங்கமாக இன்று முதல் தடவையாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பயிற்சியை நிறைவு செய்தார்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் ‘எலைட் பாரா ரெஜிமெண்ட்’ ராணுவ முகாமில் இணைந்து தோனி இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதில் ஒரு அங்கமாகப் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்கும் பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த 5 வாரப் பயிற்சியில், மொத்தம் 5 முறை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தோனி குதிப்பார் என இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்காக தோனி இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினெண்ட்டாக நியமிக்கப்பட்டார்.
தனது ஓய்வுக்கு பிறகு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக கடமையாற்ற வேண்டும் என்றும், அதுவே தனது சிறு வயது முதலான லட்சியம் என்றும் தோனி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
(படம்: தோனி டுவிட்டர்)