புதுடெல்லி,ஆகஸ்ட் 19- ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலிய ஏழு பேரை விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கில், அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவில் எந்தவித சட்ட விதிமீறல்களும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.ஆனால், இதை எதிர்த்து முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அவ்வழக்கை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த 12–ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, ஒரு வார காலத்திற்குள் இந்த வழக்கு தொடர்பாக எழுத்துப் பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் தமிழக அரசு தமது வாதத்தை இன்று தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வதாகத் தமிழக அரசு எடுத்த முடிவில் எந்தச் சட்டவிதி மீறலும் இல்லை.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்குத் தேவையான அதிகாரம் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 (7)–ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் மூலம் மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் நீதிமன்றங்கள் கேள்வி எழுப்ப முடியாது. மேலும், ஒரே குற்றத்துக்காக இரண்டு தண்டனைகள் கொடுக்க முடியாது.
இவர்கள் விடுதலையில் சம்பந்தப்பட தமிழக அரசிற்கு முழு உரிமை உள்ளது. எனவே, தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டுள்ளது.