சென்னை, ஆகஸ்ட் 19- நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி, விஷால் அணி என நடிகர் நடிகைகள் இரண்டு பிரிவாகச் சிதறிக் கிடக்கிறார்கள்.
இரண்டு அணியினருமே பொதுவான நடிகர் நடிகைகளைச் சந்த்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் விஷால் அணியினர் உச்ச நட்சத்திரமான ரஜினியையும் கமலையும் சந்தித்து ஆதரவு கேட்டார்கள்.விரைவில் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகச் சொன்னார்கள்.
நடிகர்- நடிகைகளில் யார் எந்த அணியை ஆதரிக்கப் போகிறார்கள் எனத்தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று வாலு பட வெற்றிச் சந்திப்பில் நடிகர் சிம்பு தனது ஆதரவு சரத்குமாருக்குத் தான் எனத் தெரிவித்துள்ளார்.
“நான் விஜய்காந்த் தலைவராக இருந்த போதிலிருந்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். என் ஆதரவு எப்போதும் சரத்குமார் அணிக்குத் தான்.அவர்கள் தான் நடிகர் சங்கத்திற்காக அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்கள் எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள். இப்போதும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.
தேர்தல் வரைக்கும் தான் இந்த அணிகள் எல்லாம். தேர்தலுக்குப் பிறகு வெவ்வேறு அணிகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு விஷால் அணியினர் என்ன சொல்லப் போகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.