புதுடில்லி, ஆகஸ்ட் 19- கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்களை வெளியிட்ட குற்றத்திற்காகக் கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் வழக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
தாயின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று மருத்துவர்கள் கூட தெரிவிக்கக் கூடாது என்பது சட்டம். குழந்தையின் ஆரோக்கியம், வளர்ச்சி குறித்து மட்டுமே சொல்ல வேண்டுமே தவிர,குழந்தையின் பாலினம் குறித்துத் தெரிவிக்க உரிமையில்லை.
ஏனெனில் ஆண் குழந்தை என்றால் பெற்றோரும் மற்றோரும் பெருமையும், பெண் குழந்தை என்றால் கொஞ்சம் கவலையும் அடையக் கூடும்.மேலும், பெண் குழந்தை என்றால்செலவீனம் என எண்ணிச் சிலர் கருவிலேயே கலைத்துவிடுவதும் உண்டு.
எனவே, கர்ப்பிணித் தாய்க்குச் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், ஸ்கேன் செய்யும் நிபுணர்கள் என யாரும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்துத் தகவல் சொல்லக் கூடாது எனவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால்,இந்த உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு கூகுள், யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற இணையதள நிறுவனங்கள் அதனை வெளியிடுகின்றன.
ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத கூகுள், யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற இணையதள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சாபு மேத்யூ ஜார்ஜ் என்பவர் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வழக்குக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டனர்.