ஜெயபுரா, ஆகஸ்ட் 19 – 54 பயணிகளின் உயிரை பலி வாங்கிய டிரிகானா விமான விபத்தில், பயணிகளின் சடலங்கள் அனைத்தும் நேற்று ஜெயபுராவில் உள்ள பயங்கரா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, பாப்புவா நியு கினியின் தலைநகர் ஜெயபுராவில் இருந்து ஒக்சிபில் என்ற நகருக்கு புறப்பட்ட டிரிகானா ஏரின் ஏடிஆர் 42-300 (ATR42-300) ரக விமானம், ஒக்சிபில் விமான நிலையத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் பிந்தாங் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானப்பயணிகள் அனைவரும் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டனர்.
மோசமான வானிலை தான் விமான விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயபுராவிற்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. எனினும், வானிலை தொடர்ந்து மோசமானதாக இருந்ததால் அதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அவர்களின் சடலங்களை மீட்புக் குழுவினர் ஜெயபுராவிற்கு கொண்டுவந்தனர்.
அவற்றில் 4 பேரின் சடலங்கள் மட்டும் அடையாளம் காண்பதற்காக சென்டானி விமான தளத்தில் கூட்டு பயிற்சி மேற்கொள்ளும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், மீட்கப்பட்ட காக்பிட் குரல் பதிவு கருவி ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் தான், விமான விபத்திற்கான காரணங்கள் தெரியவரும்.
இதற்கிடையில், கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.5 பில்லியன் ரூபியா பணமும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.