கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – பெர்சே பேரணியின் போது அதில் பங்கேற்பவர்கள் நிர்வாணமாகவும் நடக்கலாம், சத்தம் போடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் டத்தாரான் மெர்டேக்கா மற்றும் பாடாங் மெர்போக் போன்ற பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் போராட்டம் நடத்த வேண்டுமென்றால், எந்த அரங்கத்திற்கு வேண்டுமானாலும் செல்லட்டும்” என்று அட்னான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மெலாவத்தி அரங்கத்திற்கு செல்லுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், கத்துங்கள், நிர்வாணமாக நில்லுங்கள், என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்” என்று தெங்கு அட்னான் கூறியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் டத்தாரான் மெர்டேக்காவில் பேரணி நடத்த அனுமதியளிக்குமாறு கோலாலம்பூர் மாநகர சபையிடம் (டிபிகேஎல்) பெர்சே அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அதை டிபிகேஎல் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தெங்கு அட்னான் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.