புது டெல்லி, ஆகஸ்ட் 22 – இந்தியாவில் விமானப் போக்குவரத்து எப்போதும் அபாயகரமானது தான் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கட்டுரை ஒன்றில் விமர்சித்து இருந்தது. அது உண்மை தான் என நிரூபிப்பதைப் போன்ற சம்பவங்கள் இந்திய விமான போக்குவரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இம்மாதம் 18-ம் தேதி அன்று, 142 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் தோகாவில் இருந்து கொச்சி நோக்கி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், திருவனந்தபுறம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏதேனும் கோளாறு இருக்குமோ? என அனைவரும் பதற்றத்துடன் காத்திருக்கும் பொழுது தான், விமானத்தில் கட்டாய இருப்பாக வைத்திருக்க வேண்டிய எரிபொருள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கவனக் குறைவாக இருந்த 2 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தேவை இருப்பதை அறிந்த விமானி, விமானத்தை முதலில் அருகில் இருக்கும் பெங்களூரு விமான நிலையத்தில் தான் தரையிறக்க முடிவு செய்துள்ளார். எனினும், மோசமான வானிலை காரணமாக அவரால் அங்கு தரையிறக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து தான், அவர் திருவனந்தபுற விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளார்.
அங்கும் மோசமான வானிலை நிலவி உள்ளது. எனினும், நான்கு தடவை தொடர் முயற்சிக்கு பிறகே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் விதிமுறைகளின் படி1500 கிலோ எரிபொருளை சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், தரையிறக்கப்பட்ட விமானத்தில், வெறும் 270 கிலோ எரிபொருள் மட்டுமே இருந்துள்ளது. இந்த எரிபொருள் அளவானது ஓடுதளத்தில் செல்லும்போது 10 நிமிடங்களுக்குள் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்தில் ஓடக்கூடிய வாகனங்களை இயக்குவதற்கே, சில அடிப்படை அம்சங்களை ஆராய்வது அவசியம். அப்படி இருக்கையில், நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றன விமானத்தை எத்தகைய கவனத்துடன் இயக்க வேண்டும்? ஆனால் இந்த விமானிகள் அடிப்படை நடைமுறையைக் கூட கவனிக்காமல் இருந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.