சென்னை- 80 கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளைத் திருடிய வழக்கில் இயக்குநர் வீ.சேகருக்குப் பிணை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
சாமி சிலைகளைத் திருடி வெளிநாட்டிற்குக் கப்பல் மூலம் கடத்தி விற்பனை செய்து வந்த குற்றத்திற்காகப் பிரபலத் திரைப்பட இயக்குநர் வீ.சேகர் கைது செய்யப்பட்டார்.
அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிலைத் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தது.
ஆனால், ஒரு நாள் விசாரணையிலேயே அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி, மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வீ.சேகர் பிணை கேட்டுத் தாக்கல் செய்த மனுவும் விசாரிக்கப்பட்டு வந்தது.
வீ.சேகரின் உடல்நிலையைக் காரணம் காட்டி பிணை கோரப்பட்டது. இம்மனு சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அவரைப் பிணையில் விடுதலை செய்ய சிலைத் திருட்டுத் தடுப்புக் காவல்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதைக் காரணம் காட்டி, நீதிபதி அவருடைய பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.