பாரிஸ் – பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை, ஆம்ஸ்டர்டாம்-பாரிஸ் அதிவேக ரயிலில், தீவிரவாதி ஒருவன் அதிநவீன ஆயுதங்களுடன் புகுந்து அங்கிருந்த பயணிகளை நோக்கி சுடுவதற்கு முயன்றான். 500-க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்த அந்த பெட்டியில், இந்த சம்பவம் நடந்திருந்தால் மிகப் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். மிகச் சரியாக அந்த சமயத்தில், இரயிலில் பயணித்த மூன்று அமெரிக்கர்கள், அந்த தீவிரவாதியை தாக்கி கடும் போராட்டத்திற்கு பிறகு அவனை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அந்த தீவிரவாதி உலகின் மிகவும் அச்சுறுத்தலான இயக்கமான ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மொரோக்கோவைச் சேர்ந்த அந்த தீவிரவாதியின் பெயர் அயூப் எல் கஸானி என்று அறியப்படுகிறது. குறிப்பிட்ட அந்த தீவிரவாதி பற்றி ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகளும், ஸ்பெயின் அதிகாரிகளும், பிரான்சிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள தகவல் படி, அவன் ஸ்பெயினில் 2007-2010-ம் ஆண்டு வரை வசித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவன், கடந்த 2014-ம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து சிரியாவிற்கு சென்றதும், மீண்டும் அங்கிருந்து பிரான்சிற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீப காலமாக, பிரான்ஸ் நாட்டை தீவிரவாதிகள் தொடர்ச்சியாக குறி வைத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது முதல், இது போன்ற தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.