வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் மோடி உலக நாடுகள் முழுவதும் அரசு முறைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதை எதிர்க்கட்சிகள் பலவிதமாக விமர்சனம் செய்தாலும், அவரை ‘உலகம் சுற்றும் வயோதிகன்’ எனக் கேலி செய்தாலும், அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் அவரது கொள்கையில் பிடிவாதமாக இருந்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவிற்கு அனைத்து நாடுகளுடனான உறவைப் பலப்படுத்தி வருகிறார்.
இதனால் அந்நிய நாட்டின் முதலீடுகளும் எதிர்பாராத அளவிற்கு இந்தியாவில் பெருத்து வருகின்றன.
மோடியின் இத்தகைய அரசு முறைச் சுற்றுப் பயணத்திற்கு அனைத்து நாடுகளிலும் அமோக வரவேற்பு உள்ளது.
மோடியின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதும், அவரது பேச்சைக் கேட்க ஆர்வத்தோடு கூடுவதும் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது.
ஆனாலும், பாதுகாப்புக் கருதி முன் கூட்டிப் பதிவு செய்தவர்கள் மட்டுமே மோடி பேசும் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மோடி சென்றபோது, அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க 30,000 பேர் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் 27-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு கணினி நிறுவனங்கள் அமைந்துள்ள “சிலிக்கான் வேலி’ பகுதிக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையைக் கேட்க, 40,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பதிவு செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதால், பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு மோடியின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்ற பாஜகவின் வெளிநாட்டுத் தொடர்புத் துறைப் பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே, “அமெரிக்காவில் ஒரு இந்தியப் பிரதமரின் பேச்சைக் கேட்க இத்தனை சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது. இது நிச்சயம் மோடியின் மாயாஜாலம்தான்” எனத் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.