கோலாலம்பூர், மார்ச்.11- “இலங்கை போரில் பாதிப்புற்ற மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் ரிங்கிட்டுக்கான நன்கொடை குறித்து எட்டு மாதங்களாகியும் ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தினால், தமிழ்பேரவையைச் சேர்ந்த 11 இயக்குநர்களும் இதற்கு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பூச்சோங் முரளி (படம்) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இப்பணத்திற்க்கு 11 வாரிய இயக்குநர்களும் பொறுப்பு ஏற்று இன்னும் ஏழு நாட்களில் பொது மக்களிடம் விளக்க வேண்டும் என்று செந்தூல் காவல் நிலையத்தில் பூச்சோங் முரளி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் புகார் தொடுத்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து, ஷா ஆலாமில் உள்ள மலேசிய நிறுவனங்களின் பதிவு ஆணையத்தில் தமிழ் பேரவை பெர்ஹாட்டின் கணக்கறிக்கையில் எந்த பணமும் வரவு வைக்கப்படவில்லை. பூஜ்ஜியமாகவே இருக்கின்றதென ஆதாரத்துடன் முரளி செய்தியாளர்களிடம் சொன்னார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி பூச்சோங் முரளி இவ்விவகாரம் குறித்து, வழக்கறிஞர் ஆறுமுகத்திற்கு எதிராக போலிஸ் புகார் செய்திருந்தார். இதனை கேள்வியுற்ற ஆறுமுகம் விசாரணைக்கு தயார் என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
“பொதுமக்களின் பணத்தை அரசாங்கம் நிதியாக வழங்கியுள்ளது. கணக்கை கேட்பது குற்றமா? கொடுத்த நிதிக்கான கணக்கை உடனே வெளீயிட வேண்டியதுதனே” என்று முரளி செய்தியாளர்களிடம் வன்மையாகக் கூறினார்.
ஆனால், அதற்கான எந்த பதிலும் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் புகார் செய்துள்ளார். இப்புகாரின் போது, சமூக போராட்டவாதி வரதராஜூ, மக்கள் சக்தி வடிவேலன் மேலும் பலர் உடன் இருந்தனர்.