ஜோகூர் – கூலாய் மாவட்டத்தின் பெயரை கூலாய்ஜெயா என்று மாற்றியதற்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மாவட்டத்திற்கு மீண்டும் கூலாய் என்றே பெயர் சூட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
“சில இடங்களின், கிராமங்களின் பெயர்கள் விநோதமாக இருக்கலாம். எனினும் அவை நமது முன்னோர் சூட்டிய பெயர்கள். எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, மாற்றக் கூடாது,” என சுல்தான் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில நிர்வாக மையமான நூசாஜெயாவுக்கு வேறு பெயரை சூட்டுவது குறித்து மந்திரிபெசார் முகமட் காலிட் நூர்டின் தலைமையிலான அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராகிம் கூறினார்.
“நுசாஜெயா என்ற பெயர் அந்த இடத்தின் வரலாறு மற்றும் பின்னணியை பிரதிபலிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே புதிய பெயர் சூட்டப்படும் என நம்புகிறேன்,” என்றார் சுல்தான் இப்ராகிம்.