பெங்களூர் – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி கடந்த 24-ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது சொத்துக் குவிப்புப் புகார் கூறப்பட்டுள்ளது.
அவர் சட்டவிரோதமாகப் பெங்களூரிலும், மைசூரிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகக் ‘கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே’ என்ற சமூக அமைப்பைச் சேர்ந்த குழுவினர் புகார் எழுப்பியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி, பல்வேறு இடங்களில் சொத்து வாங்கிக் குவித்துள்ளதும், அதனைப் பல சமயங்களில் மறைத்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த உத்தர விடும்படி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ராமலிங்க ரெட்டி புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், குமாரசாமியும், அவரது மனைவியும் பெங்களூர் மற்றும் மைசூரில் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்துவதோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேணடுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.