புதுடில்லி – இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதுமான பேராசிரியர்கள் இல்லாத உத்தரப் பிரதேசம் மாநில மருத்துவக் கல்லூரி மற்றும் மத்தியப் பிரதேசம் மாநில மருத்துவ கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததாக சிபிஐ அவர் மீது வழக்குத் தொடந்திருந்தது.
ஆனால், “இதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை.சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இந்திய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளின் விவரங்கள் சரியாகச் சேர்க்கப்படவில்லை.
மேலும், ஆய்வுக்குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்று சிபாரிசு செய்யவோ, ஆய்வுக்குழுவைத் தனக்குச் சாதமாகச் செயல்பட வேண்டுமென அன்புமணி நிர்பந்திக்கவோ இல்லை. எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி அன்புமணி ராமதாஸ் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய்குமார்,விரிவான விசாரணை தேவைப்படுவதால் வழக்கை அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.