கோலாலம்பூர் – பெர்சே பேரணியில் தாம் பங்கேற்றது குறித்து விமர்சித்துள்ள அம்னோ உதவித் தலைவர்களான சாஹிட் ஹமிடி மற்றும் ஹிஷாமுடின் ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருவரும் தங்களது அமைச்சுப் பதவிகளின் மூலம் ‘வசதியாக.. சுகமாக’ இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
“என் மீது குற்றம் சாட்டுவது அவர்கள் இருவரின் உரிமை. ஏனெனில் இருவரும் தற்போது ‘வசதியாக, சுகமாக’ உள்ளனர்” என்றார் மகாதீர்.
பெர்சே பேரணியின் முதல் நாளன்று மகாதீர் மொத்தம் ஆறு நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்ததாகவும், அதை வைத்து அவர் அப்பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கருதிவிட இயலாது என்றும் சாஹிட் ஹமிடி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெர்சே பேரணியின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகாதீர் தமது துணைவியாருடன் மீண்டும் பெர்சே குழுவினரை சந்தித்தார். இம்முறை மகாதீர் தம்பதியர் ஒருமணி நேரத்தை அவர்களுடன் செலவிட்டனர்.
முன்னதாக மகாதீர் பெர்சே ஆதரவாளர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த ஹிஷாமுடின், ஆபத்தான ஒரு விஷயத்தை மகாதீர் ஊக்கப்படுத்தி வருவதாக கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே சாஹிட் ஹமிடியையும், ஹிஷாமுடினையும் மகாதீர் கடுமையாகச் சாடியுள்ளார்.