செப்பாங்கார் (சபா) – பெர்சே பேரணியில் கலந்து கொண்டதன் மூலம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எல்லை கடந்து சென்று விட்டதாக அம்னோ உதவித் தலைவரும், தற்காப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாதீரின் பெர்சே வருகையால் அம்னோ தரப்பு கலக்கமடைந்திருப்பதை ஹிஷாமுடினின் பேச்சு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 1998ஆம் ஆண்டு இத்தகைய பேரணிகளை ஆதரிப்பது தவறு என்று கூறிய மகாதீர், அக்கூற்றுக்கு முரண்பட்டு, தற்போது காவல்துறையால் சட்டவிரோத பேரணி என்று அறிவிக்கப்பட்ட ஒரு பேரணியில் பங்கேற்றுள்ளதாக ஹிஷாமுடின் கூறியுள்ளார்.
“தாம் (மகாதீர்) பிரதமராக இருந்தபோது கடைபிடித்த, அறிவித்த அனைத்து கோட்பாடுகளுக்கும் எதிராக அவர் செயல்பட்டுள்ளார். ஆட்சியை அகற்றவும், மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தவும் சாலை பேரணிகள் சரியான அணுகுமுறை அல்ல என்று அவரது ஆட்சி நிர்வாகத்தின்போது மிகத் தெளிவாக கூறியிருந்தார் மகாதீர்” என சபா மாநிலத்திலுள்ள செப்பாங்கார் அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்தை தொடங்கி வைத்த ஹிஷாமுடின் கூறினார்.
பதவி விலகிய பிறகு தமது கருத்துக்களை வெளிப்படுத்த மகாதீருக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், எனினும் எதிர்க்கட்சியினர் வழிநடத்திய பேரணியில் மகாதீர் பங்கேற்றதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றார்.